லக்னோ: உத்தர பிரதேசத்தில் விவசாயி ராகேஷ் யாதவின் வீட்டில் புளூ டிரம்களில் புதைக்கப்பட்ட ரூ.5 கோடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம், பராய்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராகேஷ் யாதவ். ஏழ்மையான நிலையில் வாழ்ந்த இவர், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள நகைக்கடையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தார்.
திடீரென சொந்த கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 14 ஏக்கர் விவசாய நிலம், ரூ.1 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு என ஆடம்பர வாழ்க்கைக்கு மாறினார். நகைக்கடையில் ஊழியராக பணியாற்றிய ஒருவருக்கு திடீரென கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி என்பது குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் ராகேஷ் யாதவின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பூமிக்கடியில் 3 புளூ டிரம்கள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. மூன்று டிரம்களில் ரூ.5 கோடிக்கும் அதிகமான பணம் இருந்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், ராகேஷ் யாதவ், அவரது தம்பி ராஜேஷ் யாதவ் உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்த பணத்துக்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. அவர் திடீர் பணக்காரராக மாறியது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டிசிபி சோனம் குமார் தெரிவித்தார். பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் தனியாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.