புதுடெல்லி: பிஹாரின் மதுபானி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி தாக்குர் (26). நாட்டுப்புற பாடகியான இவர் இந்தி, வங்கமொழி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடும் திறன் பெற்றவர். ஆன்மிக கச்சேரிகளிலும் அதிகமாக பங்கேற்று வருகிறார்.
கடந்த 2025-ம் ஆண்டு பாஜகவில் மைதிலி இணைந்தார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அலிநகர் தொகுதியில் அவர் வெற்றிபெற்றார். எம்எல்ஏவான பிறகும் அவர் இசைக்கச்சேரிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதன்மூலம் ரூ.50 முதல் ரூ.90 லட்சம் வரை அவர் வருவாய் ஈட்டி வருகிறார். யூடியூப் வருவா்யும் கிடைக்கிறது.
கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட மைதிலி புதிய சொகுசு கார்களில் வலம் வருவ்து வாடிக்கை. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடந்த 15-ம் தேதி மும்பையின் பிரபல லால்பாக்சா ராஜா விநாயகர் பந்தலுக்கு மைதிலி தாக்குர் சென்றார். அப்போது அவர், ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து இறங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
“கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மைதிலி தாக்குர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் ரூ.3 கோடிக்கான சொத்துகளும் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்போது அவர் ரூ.13 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரில் வலம் வருகிறார்” என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல்வாதிகள் வசதியாக வாழ்வது சிலருக்கு பிடிக்கவில்லை. தற்போது இளம்வயது எம்எல்ஏ (மைதிலி தாக்குர்) ஒருவர் சொகுசு காரில் சென்றதை சிலர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். நாங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கிறோம்.
தன்னலம் இன்றி மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். அதேநேரம் எங்களது தொழில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் ஏழையாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.