மும்பை: ஐநாக்ஸ் நிறுவனத்தில் துணை தலைமை மேலாளராகப் பணியாற்றுபவர் கிரிஸ் அமின். இவருக்கு தெரியாத எண் ஒன்றில் இருந்து நிர்வாக இயக்குநர் சித்தார்த் ஜெயின் போட்டோவுடன் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்தது.
அதில் ‘இது எனது தனிப்பட்ட போன் எண், இதை யாரிடமும் தர வேண்டாம். சித்தார்த் ஜெயின்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 3-ம் தேதி அதே எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. அதில் ஒரு வங்கிக் கணக்கை குறிப்பிட்டு, கம்பெனி கணக்கில் இருந்து ரூ.46.5 லட்சத்தை அனுப்பவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த வங்கிக் கணக்குக்கு ரூ.46.5 லட்சத்தை அமின் அனுப்பினார்.
இதுபோல அடுத்தடுத்து 63 முறை மொத்தம் ரூ.10 கோடியே 40 லட்சத்து 71,924-ஐ அனுப்பியுள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அமின் தனது முதலாளியை அலுவலக லேண்ட்லைன் மூலம் தொடர்பு கொண்டு அனுப்பப்பட்ட பணத்துக்கு ரசீதுகளைக் கேட்டுள்ளார். அப்போது, சித்தார்த் ஜெயின் நான் எப்போது பணம் அனுப்ப சொன்னேன் என்று கேட்டுள்ளார். அப்போதுதான் மிகப் பெரிய மோசடி நடைபெற்றது தெரிந்தது.
இதுகுறித்து ஐநாக்ஸ் நிறுவனம் சார்பில் மும்பை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் பணம் டெல்லியில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து டெல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளைத் தொடர்பு கொண்டு, மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து யாராவது பணம் எடுக்க வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினர்.
4 பேர் கைது
டெல்லி ஐடிஎப்சி வங்கி ஜசோலா கிளையில் உள்ள வங்கிக் கிளைக்குத் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் பணம் எடுக்க 2 பேர் வந்தனர். வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின்படி போலீஸார் விரைந்து வந்து அந்த 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கள் வங்கி கணக்குக்கு வரும் பணத்தை எடுத்துக் கொடுத்தால் ரூ.30,000 கமிஷன் தருவதாக சிலர் கூறியதால் தங்கள் வங்கி கணக்கை மர்ம நபர்களிடம் தெரிவித்ததாக கூறினர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்.