திருவனந்தபுரம்: கேரள தேர்தல் பிரச்சாரத்தில் மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரம் தீவிரமடைந்திருக்கிறது. இதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மூன்று அணிகள் சார்பிலும் அதிதீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரம் தீவிரமடைந்திருக்கிறது. இதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த ஷாகிப் கீதாஞ்சலி, அவரது மனைவி அக்சா பீட்டர் இணைந்து சுவர் விளம்பரம் வரையும் ரோபோவை உருவாக்கி உள்ளனர். இருவரும் மருத்துவர்கள். மருத்துவ வரைபடங்களை உருவாக்குவதற்காக "சுவர்போட்" என்ற பெயரில் அவர்கள் ரோபோவை தயாரித்தனர்.
இந்த ரோபோவில் இணைக்கப்பட்டிருக்கும் கணினியில் வாசகங்கள் மற்றும் படங்களை பதிவு செய்ய வேண்டும். இதை அப்படியே சுவரில் ரோபோ வரைந்துவிடும். ரோபோவில் உள்ள பெட்டியில் தேவையான பெயின்ட் கலவையை சேர்க்க வேண்டும் .
இதுகுறித்து சுவர்போட் ரோபாவை இயக்கும் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கூறும்போது, ‘‘மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. ஒரு சுவர் விளம்பரத்தை வரைய, எழுத ஓவியர்களுக்கு சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால் எங்களது சுவர்போட் ரோபோ 20 நிமிடங்களில் சுவர் விளம்பரத்தை நிறைவு செய்யும்.
இதை இயக்க ஒரு நபர் போதும். தற்போது அனைத்து கட்சியினரும் எங்களது ரோபோக்கள் மூலம் சுவர் விளம்பரங்களை வரைய முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் எங்களிடம் போதிய ரோபோக்கள் இல்லை. தேவை அதிகரிப்பதால் அடுத்த ஆண்டுக்குள் அதிக ரோபோக்களை தயாரிப்போம்’’ என்றார்.