இந்தியா

மம்தா, ரிதப்ரதா தரப்புகளுக்கு தனித்தனி கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: அகில இந்திய திரிணமூல் காங்கிரஸின் இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனி கட்சிப் பெயரும், தனித்தனி தேர்தல் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரும் இரு பிரிவுகளுக்கும் தற்காலிகமாக இரண்டு தனித்தனி பெயர்கள் ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி, மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரும் ஒதுக்கப்படுகிறது.

இதேபோல், மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸுக்கு கால்பந்து வீரர் சின்னமும், ஜனநாயக திரிணமூல் காங்கிரஸுக்கு உறை (Envelope) சின்னமும் ஒதுக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக உள்கட்சி போராட்டம் வெடித்தது.

சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 எம்எல்ஏ-க்கள் ஒன்றிணைந்து, தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என கூறி, தங்கள் தரப்புக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று மேற்கு வங்க சபாநாயகர், ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்தார். அதனைத் தொடர்ந்து ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவினர், கடந்த ஜூன் மாத இறுதியில் மம்தா பானர்ஜியைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அருப் ராயை புதிய தலைவராக அறிவித்தனர்.

நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இரு பிரிவினரும் திரிணமூல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினர்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவோ அல்லது ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவோ அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையோ அதன் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

மேலும், செப்டம்பர் 18 காலை 11 மணிக்குள் இரு தரப்பும் தங்களின் புதிய அமைப்புகளுக்கான மூன்று மாற்றுப் பெயர்கள் மற்றும் மூன்று சுயேச்சை சின்னங்களின் விருப்பப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி, இரு தரப்பும் புதிய கட்சிப் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறித்த விருப்பப் பட்டியலை சமர்ப்பித்தன. அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இரு பிரிவுகளுக்கும் தற்காலிகமாக புதிய கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT