அனந்தபூர்: பள்ளி மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல் நடத்திய வழக்கில் போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட இளைஞரின் வலது கால் அகற்றப்பட்டது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ராப்தாடு மண்டலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்குள், கடந்த மாதம் 31-ம் தேதி எலக்ட்ரிக் ரம்பத்துடன் புகுந்த ஹேமந்த் எனும் இளைஞர், 10-ம் வகுப்பு மாணவியை (15) சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையில், ஆத்மகூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஹேமந்தை, போலீஸார் சுட்டுப் பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேமந்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஹேமந்தை மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஹேமந்தின் வலதுகால் முட்டியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், அந்த காலை அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் கூறினர். நேற்று அவரின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.