இந்தியா

ஓய்வுபெற்ற விஞ்ஞானியிடம் டிஜிட்டல் கைது மூலம் ரூ.1.25 கோடி மோசடி: 11 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநர் பிரதீப் குமார் தாஸ்(69). ஓய்வுபெற்ற விஞ்ஞானியான இவர், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.1.25 கோடியை இழந்ததாக புகார் செய்துள்ளார். இதையடுத்து, அவரிடம் டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரதீப் குமார் தாஸுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் டெல்லி காவல் துறை, தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் எனக் கூறியுள்ளனர். பணமோசடி வழக்கு ஒன்றில் அவரது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அவரை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டியுள்ளனர்.

அவரது வங்கி இருப்பை சரிபார்க்க வேண்டும் எனக் கூறிய அவர்கள் பிரதீப் குமார் தாஸின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, ஆர்டிஜிஎஸ் மூலம் மூன்று வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1,25,09,000/- தொகையை அனுப்புமாறு கூறியுள்ளனர். மேலும், அவரைத் தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைத்திருந்து அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக சிறப்பு பிரிவு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதுபோன்ற மோசடிக்கு பயன்படுத்துவதற்காக ஒரு குழு வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, துவாரகாவின் செக்டார்-7-ல் ராம்பால் சவுக் அருகே உள்ள ஒரு கட்டடித்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு தங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

செயலி மூலம்...

அவர்களின் போன்களை சோதித்ததில், டெலிகிராம் மற்றும் எஸ்எம்எஸ் டூல்ஸ் எனப்படும் சந்தேகத்துக்கிடமான செயலி இருந்தது கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சைபர் கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு முறை கடவுச்சொற்கள் (ஓடிபி) உள்ளிட்ட குறுஞ்செய்திகளை தானாக அனுப்பும் வகையில் இந்தச் செயலி கட்டமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், வங்கிக் கணக்குகளை வழங்குவது, பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மற்றும் கமிஷன்களை சேகரித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய தடயங்களைக் கண்டறியவும் இந்த விசாரணை உதவியுள்ளது.

விஜயவாடா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், போப்பனா பாபராவ் (79) என்ற முதியவர், டிஜிட்டல் கைது மோசடி மூலம் ரூ.10.25 கோடியை இழந்துள்ளார். ஆந்திர காவல் துறையின் உடனடி தலையீடு மற்றும் ஒருங்கிணைப்புக்குப் பிறகு, மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.7.25 கோடி முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT