புதுடெல்லி: இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக இண்டியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் டெல்லி வீட்டில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. முன்னாள் சபாநாயகர் மீரா குமார் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ்ஐஆர் பணியின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட பலரும் கூட்டத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
எஸ்ஐஆர் பணியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற ஒப்புதல் அனுமதி இன்றி படிவம் 6-ல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணியின்போது திட்டமிட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பொது கண்டன விசாரணை நடத்த கோருகிறேன். அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறேன். எஸ்ஐஆர் விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கார்கே பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
எஸ்ஐஆர் பணியின்போது சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி இந்திய வாக்காளர்களில் 15% பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த பேரவைத் தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் தன்னை காப்பாற்றி விடுவார்கள் என்று ஞானேஷ் குமார் நம்புகிறார். ஆனால் மக்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
மொத்தம் 3.23 மணி நேரம் மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது. இதில் 19 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 215 எம்பிக்கள் பங்கேற்றனர்.
மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.