இந்தியா

“ஜனநாயக சீர்குலைவு” - மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் மறுதேர்தல் நடத்த உத்தரவு

டெக்ஸ்டர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் மறுதேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் புதிய வாக்கெடுப்பு நடத்தப்படும். ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலின் போது இத்தொகுதியில் பரவலான முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஃபால்டா தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்கள் டேப் கொண்டு மறைக்கப்பட்டதாகவும், வாக்குச்சாவடி ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் குவிந்தன. குறிப்பாக, பாஜக இத்தகைய முறைகேடுகளை முன்வைத்து அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை விடுத்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அத்தொகுதியின் முந்தைய வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று (மே 2) தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மற்ற இரு தொகுதிகளான மகரஹாத் பாஸ்சிம் மற்றும் டயமண்ட் ஹார்பர் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்தது. ஃபால்டா தொகுதியில் மட்டும் தொகுதி முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ உத்தரவின்படி, ஃபால்டா தொகுதியில் மே 21-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். இதனைத் தொடர்ந்து, அங்குப் பதிவான வாக்குகள் மே 24-ஆம் தேதி அன்று எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நடைமுறைகளைச் சீர்குலைக்கும் வகையில் தீவிர தேர்தல் விதிமீறல்கள் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆணையம், துணை வாக்குச்சாவடிகள் உட்பட அந்தத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மையங்களிலும் இந்தத் தேர்தல் மீண்டும் நடத்தப்படுவதை உறுதி செய்துள்ளது.

SCROLL FOR NEXT