கோப்புப்படம்
புதுடெல்லி: கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முசாபர் ரத்தரை பிடிக்க இண்டர்போல் உதவி கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இண்டர்போல் அமைப்பு ரத்தருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது.
முசாபர் ரத்தர் தெற்கு காஷ்மீரை சேர்ந்த குழந்தை நல மருத்துவர். இவர் ஏற்கெனவே என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டை வெடிக்கச் செய்ததில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்ட மருத்துவர் உமர்-உன்-நபியின் நெருங்கிய கூட்டாளியாக ரத்தர் இருந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற ரத்தர், தற்போது ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்தே அவர் இந்த தாக்குதலை ஒருங்கிணைத்ததாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ரத்தர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மத்தியில் டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்புக்கு சற்று முன்னதாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். முதலில் துபாய்க்குச் சென்ற அவர் தற்போது ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.