கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிதப்ரதா பானர்ஜி | கோப்புப் படம்

 
இந்தியா

“நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்.” - மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி

மோகன் கணபதி

கொல்கத்தா: தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்றும், தங்கள் அணியின் பலம் 58-ல் இருந்து 64 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தழுவினார். தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக செயல்படத் தொடங்கினர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, திரிணமூல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சொவன்தேப் சட்டோபாத்யாயை மம்தா பானர்ஜி அறிவித்தார். இதையடுத்து, எதிர் தரப்பினர் ரிதப்ரதா பானர்ஜியை முன்னிறுத்தினர். மொத்தமுள்ள 80 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 58 பேர், ரிதப்ரதா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

அந்தக் கடிதம் சபாநாயகர் ரதிந்திர போஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா பானர்ஜி, “மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது நாங்கள் இன்னும் ஒரு படி மேலே செல்ல விரும்புகிறோம். திரிணமூல் காங்கிரஸின் சட்டமன்றக் குழுவுக்கு தலைமை ஆலோசகராக இருந்து மம்தா பானர்ஜி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா பானர்ஜி, “எங்கள் அணியின் பலம் 58-ல் இருந்து 64 ஆக உயர்ந்துள்ளது. கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவும், எம்பிக்களின் ஆதரவும் எங்கள் அணிக்கு உள்ளது. நாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ். நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணையப் போவதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல.

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை. பெரும்பாலான எம்பிக்களும் காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை. அப்படி இருக்க, இணைப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. மக்களவையில் உள்ள அதிருப்தி எம்பிக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள். டெல்லியில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பது அவர்களின் விஷயம். அது எங்களுக்கு முக்கியமல்ல” என தெரிவித்துள்ளார்.

டெல்லயில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொண்டனர். இதையடுத்து, மம்தா பானர்ஜி, நேற்று சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, அபிஷேக் பானர்ஜி இன்று ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT