புதுடெல்லி: ஈரான் போர் மற்றும் மேற்கு ஆசிய பதற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப வாய்ப்பளிக்காமல் வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையை வாசிப்பது எம்பிக்களுக்கு நியாயமற்றது என்று சசி தரூர் விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு எதிராக ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், வெளியுறவு தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான சசி தரூர், ‘‘இது ஒரு தீவிரமான பிரச்சினை. இது சபையில் விவாதிக்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே நாடாளுமன்றத்தின் நோக்கம். எந்த கேள்வியும் இல்லாமல், ஓர் அறிக்கையைப் படிப்பது, சபை உறுப்பினர்களுக்கு நியாயமானது அல்ல. எரிசக்தி பாதுகாப்பு குறித்தும், எண்ணெய் விலை உயர்வு குறித்தும் நாங்கள் கேள்வி எழுப்பும் வகையில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டம் தொடர்பான கேள்விகள் நிறைய இருக்கின்றன. அத்தகைய கேள்விகளை எழுப்ப நாடாளுமன்றமே சரியான களம். நாங்கள் எங்களை அரசாங்கம் என்று கூறவில்லை. அவர்கள்தான் அரசாங்கம். அவர்கள் அவர்களுக்கு விருப்பமானதைச செய்வார்கள். ஆனால், குறைந்தபட்சம் நாட்டின் பல்வேறு பிரிவினரின் கருத்துகளைக் கேட்க நாடாளுமன்றத்தை அவர்கள் பயன்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் பேசும்போது, ‘‘எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. வளைகுடா மக்கள் தங்களின் எதிர்காலம் குறத்து அச்சம் அடைந்து இருக்கிறார்கள். அங்குள்ள நிலைமை குறித்து இந்தியா அமைதியாக இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். விவாதத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு கட்சி சார்ந்த விஷயம் அல்ல. அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.