கோப்புப் படம்

 
இந்தியா

பள்ளிகள் அருகே 50 மீ. தொலைவுக்கு குளிர்பானம், துரித உணவுகள் விற்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை

மோகன் கணபதி

ஜோத்பூர்: பள்ளிகளை ஒட்டி 50 மீட்டர் சுற்றளவில் சிப்ஸ், குளிர்பானங்கள், துரித உணவுகள் ஆகியவற்றின் விற்பனைக்கு ஜோத்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜோத்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் குமார் தண்ட், தாமாக முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். ஜென் ஸி, ஜென் ஆல்பா, ஜென் பீட்டா ஆகிய மூன்று தலைமுறையினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அவர் தனது உத்தரவில், “2047-ன் போதும் அதற்குப் பிறகும் நாட்டை வழிநடத்த ஜென் ஸி, ஜென் ஆல்பா, ஜென் பீட்டா தலைமுறையினரை நாடு தயார்படுத்தி வருகிறது. அதேநேரத்தில், அவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய அடிப்படை நிறுவனங்கள் - குறிப்பாக கிராமப்புற அரசுப் பள்ளிகள் - கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளால் தொடர்ந்து பாதிக்கப்படுவது குறித்து இந்த நீதிமன்றம் ஆழ்ந்த கவலை கொள்கிறது.

ஜென் ஸி, ஜென் ஆல்பா, ஜென் பீட்டா ஆகிய மூன்று தலைமுறையினர்தான் எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள். அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளி உணவகங்களிலும், பள்ளியை ஒட்டி 50 மீட்டர் சுற்றளவிலும் அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. குறிப்பாக கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், சிப்ஸ், பிற துரித உணவுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளைக் கொண்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குழுவை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். இந்த குழுக்களின் விவரம் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். எட்டு வாரங்களுக்குள் பள்ளி உணவகங்களின் உணவுப் பொருட்களின் கலோரி அளவு, மூலப்பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு குறித்த தகவல்களைக் கொண்ட உணவுப் பட்டியல் பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும்.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பாதுகாப்பான மற்றும் சமச்சீரான உணவு குறித்த 2020 விதிமுறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஆறு வாரங்களுக்குள் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மதிய உணவுத் திட்டங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து திட்டங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) -ன் சமச்சீர் உணவு வழிகாட்டுதல்களுக்கு இணங்க இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், ராஜஸ்தான் தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் (கல்வி), செயலாளர் (உணவு மற்றும் சிவில் வழங்கல்), இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் ராஜஸ்தான் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், அவர்கள் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT