வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் உள்ள தேசிய தேரவு முகமை அலுவலகம் அருகே, அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
இந்தியா

குருகிராம் மருத்துவரிடம் இருந்து நீட் வினாத்தாளை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ராஜஸ்தான் சகோதரர்கள் கைது

கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தில் 4 பேர் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: குரு​கி​ராம் மருத்​து​வரிட​மிருந்து ரூ.30 லட்​சத்​துக்கு நீட் வினாத்​தாளை வாங்​கிய​தாக ராஜஸ்​தானைச் சேர்ந்த சகோதரர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில் ஒருவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழு​வதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (யுஜி) 2026 தேர்வு நடை​பெற்​றது.

இந்தத் தேர்வுக்கு முன்​கூட்​டியே வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​த​தால் நீட் தேர்வு நேற்று முன்​தினம் ரத்து செய்​யப்​பட்​டது. இதுகுறித்து விரி​வான விசா​ரணை நடத்த அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சிபிஐ முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதில் கேரளா, மகாராஷ்டிர மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காகச் சிறப்​புப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, புதிய தேர்வு நடை​பெறும் தேதி அடுத்த 7 முதல் 10 நாட்​களுக்​குள் அறிவிக்​கப்​படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரி​வித்​துள்​ளது. இதனிடையே நீட் தேர்​வின் நம்​பகத்​தன்மை குறித்து மாணவர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளதோடு, எய்ம்ஸ்​- டெல்லி மூலம் தேர்வை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்​நிலை​யில், நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கின் பின்​னணி ஒவ்வொன்​றாக வெளிச்​சத்​துக்கு வந்து கொண்​டிருக்​கிறது. ராஜஸ்தானின் ஜம்வா ராம்​கரைச் சேர்ந்த சகோ​தரர்​களான மங்கிலால் மற்​றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்​-​யுஜி வினாத் ​தாளை குரு​கி​ராம் மருத்​து​வர் ஒருவரிட​மிருந்து ஏப்​ரல் 26ம் தேதி ரூ.30 லட்​சத்​துக்கு வாங்​கியது தெரிய​வந்​துள்​ளது.

இவர்​களில் ஒரு​வர், சிகார் பகு​தி​யில் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்​தாளைக் கொடுத்​துள்​ளார். பின்​னர் ஏப்​ரல் 29-ம் தேதி அவர்​கள் அந்​தத் தாளை பலருக்கு விற்றுள்​ளனர். ஜெய்ப்​பூர் அருகே உள்ள ‘சி​கார்' பகு​தி, இந்த வினாத்​தாள் கசிவு மோசடி​யின் மையப்​புள்​ளி​யாக மாறி​யுள்​ளது. சிகாரில் உள்ள எம்​பிபிஎஸ் ஆலோ​சனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்​ட​வாரியா என்​பவர் அந்​தத் தாளை வாங்​கி, கேரளாவில் எம்​பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒரு​வருக்கு ரூ.30,000-க்கு விற்​றுள்​ளார்.

அந்த மாணவர் தேர்​வுக்கு முந்​தைய நாள் தனது தந்​தைக்கு (சி​காரில் விடுதி நடத்​துபவர்) அந்​தத் தாளை அனுப்​பி​யுள்​ளார். அவர் தனது விடு​தி​யில் தங்​கி​யிருந்த மாணவி​களுக்கு அதனைப் பகிர்ந்துள்​ளார். இந்த வழக்​கின் முக்​கிய நபராக குரு​கி​ராம் மருத்து​வர் கருதப்​படு​கிறார்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் ஒரு​வ​ரான தினேஷுக்கு ஓர் அரசியல் கட்​சி​யுடன் தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்த 4 குழந்​தைகள் கடந்த ஆண்டு நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்​றிருந்​ததும் விசா​ரணை​யில் தெரியவந்துள்​ளது.

உத்​த​ராகண்ட் மாநிலம் டேராடூனில் கைது செய்​யப்​பட்ட ராகேஷ் குமார் மண்​ட​வாரி​யா, சுமார் 700 மாணவர்​களுக்கு வினாத்​தாளை விநி​யோகித்​த​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர் இது பிடிஎஃப் வடிவிலும் அச்சு வடி​விலும் நாடு முழு​வதும் பரவி​யுள்​ளது.

ராஜஸ்​தான் போலீ​ஸாரின் கூற்​றுப்​படி, மாணவர்​களிடையே பகிரப்​பட்ட ஒரு ‘வே​தி​யியல் கெஸ் பேப்​பரில்' இருந்த 410 கேள்விகளில் சுமார் 120 கேள்வி​கள் அசல் வி​னாத்​தாளில் இடம்​பெற்​றிருந்​தது தெரிய​வந்​துள்​ளது. தற்​போது நாசிக்​கிலும் ஒரு​வர்​ கைது செய்​யப்​பட்​டுள்​ளார்​. இதுகுறித்​து தீவிர வி​சா​ரணை நடைபெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT