புதுடெல்லி: வடக்கு மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் ரூ.341 கோடி மதிப்பிலான ‘கவச்' திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
‘கவச்' என்பது இந்திய ரயில்வேயால் உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தடுத்தல், ஓட்டுநர் கவனக்குறைவாக சிக்னல்களை கடந்து செல்லும் போது தானாகவே ரயிலை நிறுத்துதல், மூடு பனி காலங்களில் எச்சரித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் விபத்துகளை தவிர்க்கிறது. ரயிலின் வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும் போது வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வடக்கு ரயில்வே மண்டலத்தின் அம்பாலா கோட்டத்தில் ரூ.201 கோடி செலவில் 811 கி.மீ. தொலைவுக்கும், மேற்கு ரயில்வே மண்டலத்தின் அகமதாபாத் கோட்டத்தில் ரூ.140 கோடி செலவில் ரூ.598 கி.மீ. தொலைவுக்கும் ‘கவச்' திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அம்பாலா கோட்டத்தில் அம்பாலா கன்டோன்மென்ட் - லூதியானா, கல்கா-சண்டிகர்- நியூ மொரிண்டா- சானேவால், ஸ்ரீஹிந்த் - தவுலத்பூர் சவுக், ராஜ்புரா - பதிண்டா உள்ளிட்ட வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவை ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித் தடங்கள் ஆகும். மேலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிக அளவில் கையாளும் வழித் தடங்கள் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் கோட்டத்தில் ஏற்கெனவே சுமார் 702 கி.மீ. தொலைவுக்கு ‘கவச்' அமைப்பை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள புதிய ஒப்புதலின் மூலம், அப்பிரிவின் எஞ்சிய பகுதிகளும் இந்த பாதுகாப்பு அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மேலும் உலகளவில் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரமான எஸ்ஐஎல்-4 (Safety Integrity Level-4) தர நிலைகளுக்கு இணங்க ‘கவச்' வடிவமைக்கப்பட்டுள்ளது.