தானே: பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்றுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலாவது பயணிகள் ரயில் போக்குவரத்து 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் போரி பந்தர் (மும்பை) மற்றும் தானே இடையே தொடங்கப்பட்டது. இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டு நேற்றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தானே ரயில்வே பாலம், அம்ரித் பாரத் ரயில் ஆகிய புகைப்படங்களை ஒருங்கிணைத்து ஒரே புகைப்படமாக நேற்று வெளியிட்டு ‘பயணம் தொடர்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வேயின் 173 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், தானே ரயில்வே பாலம், ஒரு பழங்கால ரயிலையும் சித்தரிக்கும் நம்பகமான காப்பகப் புகைப்படத்தையும் நாங்கள் பகிர்ந்துள்ளோம். இதன் மூலம், வரலாற்றுப் பதிவு சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.