பெங்களூரு: தெற்கு புல்லட் ரயில் வழித்தடத்தில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 73 நிமிடங்களில் செல்ல முடியும். இதேபோல பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 2. 10 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு-மும்பை இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி 4 ஆயிரம் கி.மீ. தொலைவு புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் 3 ஆயிரம் கி.மீ. புல்லட் ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
மும்பை - அகமதாபாத் இடையிலான நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்த ரயில் சேவை தொடங்கப்படும். பெங்களூரு-புனே புல்லட் ரயில் வழித்தடம் அடுத்த அதிவேக ரயில் திட்டங்களில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது. பெங்களூருவில் இருந்து ஹூப்ளி வழியாக புனே வரை ஒட்டுமொத்த கர்நாடகாவையும் உள்ளடக்கியதாக இந்த வழித்தடம் அமையும். பெங்களூரு-மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவைக்கான மின்சார பணிகள் நடந்து முடிந்துள்ளன.
அடுத்த சில வாரங்களுக்குள் இந்த ரயில் இயக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ள தெற்கு புல்லட் ரயில் வழித்தடம் பெங்களூரு, ஹைதராபாத், அமராவதி, சென்னை ஆகிய நகரங்களை இணைக்க உள்ளது. இந்த வழித்தடத்தில் பெங்களூரு-ஹைதராபாத் இடையிலான புல்லட் ரயில் பயண நேரம் 2 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும்.
பெங்களூரு – சென்னை இடையிலான புல்லட் ரயில் பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாக மாறும். இதனால் இரு நகரங்களும் ஒரே நகரமாக மாறிவிடும். தற்போது சென்னை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது புல்லட் ரயிலின் பயண நேரம் கணிசமாக குறையும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.