புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி அந்த மைதானத்தில் வலதுசாரி அமைப்பினர் மற்றும் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் ‘சுத்திகரிப்பு’ (புனிதப்படுத்தும்) சடங்குகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரத்தை ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் கார்கேவே நேரடியாக எழுப்பி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தராகண்டில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற கூட்டம் முடிந்த பிறகு, சுத்திகரிப்பு செய்த சம்பவம் நடந்து 20 நாள்கள் கடந்தும் பாஜக அரசு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறது. ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் நடத்தப்படும் இத்தகைய சடங்குகள் தீண்டாமையின் மற்றொரு வடிவமே தவிர வேறில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும், பாஜகவினர் அதனை இன்றும் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிற்போக்கு சிந்தனைக்கும் இடையே நடைபெறும் இந்த கருத்தியல் போரில் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
பிரதமர் மோடி தன்னை அனைவருக்கும் பொதுவானவர் எனக் கூறிக்கொள்ளும் நிலையில், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் இச்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார். பட்டியலினத்தவர் மரியாதையுடனும் வளமாகவும் வாழ்வதை பாஜக விரும்புவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.