புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 42-வது நினைவு தினமான நேற்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தலத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, ராகுல் காந்தி தனது பாட்டி இந்திரா காந்தியின் நினைவுகளைப் பகிர்ந்து, சிறு வயதில் அவருடன் எடுத்த புகைப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ளார். “பாட்டி, நீங்கள் எனக்கு அளித்த அழகான பரிசு இது. இதன் மதிப்பை நான் அப்போது நினைத்துப் பார்த்ததில்லை” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மேலும் அந்தப் பதிவில், பாட்டியின் மடியில் அமர்ந்து, அவரது இரு கைகளையும் பிடித்தபடி, அவர் சொன்ன சம்ஸ்கிருத ஸ்லோகங்களைத் திருப்பிச் சொன்ன நினைவுகளை ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்திய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறும்போது, ‘‘இந்திரா காந்தி ஒரு இரும்புப் பெண்மணி. நாட்டின் முன்னேற்றத்துக்காகப் புரட்சிகரமான முடிவுகளை எடுத்து, உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கச் செய்தவர்.
‘ஏழ்மையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தின் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக மனம் உருகிப் பாடுபட்ட இணையற்ற தலைவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அவரது பங்களிப்பு மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அவரது நினைவுகள் என்றும் போற்றத்தக்கவை” என்றார்.
1984 அக்.31-ம் தேதி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், தனது இரு பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.