டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று 9 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். படம்: பிடிஐ

 
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் பேரணி: ராகுல், பிரியங்கா கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி டெல்லியில் தேர்​தல் ஆணை​யம் நோக்கி எதிர்க்​கட்​சி தலைவர்கள் நேற்று பேரணி நடத்​தினர். பின்​னர் அவர்​கள் 9 மணி நேர தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்​தி, எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

நாடு முழு​வதும் 20 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நிறைவுப் பெற்று உள்​ளது. இதில் சுமார் 13 கோடி பேரின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்டி வரு​கின்​றன.

இந்த விவ​காரம் தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காலை நாடாளு​மன்ற வளாகத்​தில் இருந்து இண்டியா கூட்டணியில் உள்ள 20 எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த தலை​வர்​கள், தொண்​டர்​கள் தேர்​தல் ஆணைய அலு​வல​கம் நோக்கி பேரணி​யாக புறப்​பட்​டனர்.

இதில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்​தி, சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி மற்​றும் ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் பங்​கேற்​றனர். மக்​களவை, மாநிலங்​களவையைச் சேர்ந்த சுமார் 300 எதிர்க்​கட்சி எம்​பிக்​களும் பேரணி​யில் கலந்து கொண்​டனர்.

நாடாளு​மன்ற வளாகத்​தில் இருந்து 3 கி.மீ. தொலை​வுக்கு அவர்​கள் பேரணி​யாக சென்​றனர். அகில இந்​திய வானொலி நிலை​யம் அரு​கில் போலீ​ஸார் தடுப்​பு​களை அமைத்து எதிர்க்​கட்சி எம்​பிக்​கள், தலை​வர்​கள், தொண்​டர்​களை தடுத்து நிறுத்​தினர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி உள்​ளிட்​டோர் தடுப்​பு​களின் மீது ஏறி கோஷமிட்​டனர். அப்​போது ராகுல் காந்தி தேசி​யக் கொடியை ஏந்தி ஜனநாயகத்​தைக் காப்​பாற்ற வேண்​டும் என்று கோஷமிட்​டார். பின்​னர் அகில இந்​திய வானொலி நிலைய வளாகத்​தில் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர்.

அப்​போது ராகுல் காந்தி நிருபர்​களிடம் கூறிய​தாவது: நான் உட்பட 300 எம்​பிக்​களும் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை சந்​திக்க அனு​மதி கோரினோம். ஆனால் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தை அழித்து வரு​கின்​றனர். அவர்​கள் வாக்கு திருட்​டில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அகில இந்​திய வானொலி நிலைய வளாகத்​தில் இருந்து ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி உள்​ளிட்ட மூத்த தலை​வர்​களை டெல்லி போலீ​ஸார் வேனில் ஏற்​றினர். ஆனால் ராகுலும் பிரி​யங்கா​வும் வேனில் இருந்து இறங்கி மீண்​டும் வானொலி நிலைய வளாகத்​தில் நுழைந்​தனர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்​தி, 50 எம்​பிக்​கள் உட்பட 250 பேர் வானொலி நிலைய வளாகத்​தில் தொடர் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். சுமார் 9 மணி நேரத்​துக்​கும் மேலாக அவர்​களின் தர்ணா நீடித்​தது. இரவு 8 மணி அளவில் டெல்லி போலீ​ஸார் வானொலி நிலைய வளாகத்​தில் நுழைந்​தனர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி மற்​றும் எம்​பிக்​களை போலீ​ஸார் கைது செய்து அங்​கிருந்து வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்​றினர். அவர்கள் அனைவரும் கிங்​ஸ்வே முகா​முக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

திமுக, ஆம் ஆத்மி புறக்​கணிப்பு

எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுக இடம்​பெற்​றிருந்​தது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு திமுக, காங்​கிரஸ் கூட்​டணி உடைந்​தது. இதன் தொடர்ச்​சி​யாக இண்​டியா கூட்​ட​ணி​யின் கூட்​டத்தை திமுக தொடர்ந்து புறக்​கணித்து வரு​கிறது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற இண்​டியா கூட்​ட​ணி​யின் நாடாளு​மன்ற பேரணி​யை​யும் அந்த கட்சி புறக்​கணித்​தது. பஞ்​சாபில் அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. அந்த மாநிலத்​தில் ஆளும் ஆம் ஆத்​மிக்​கும் பிர​தான எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸுக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

இந்த சூழலில் டெல்​லி பேரணியை ஆம் ஆத்மி​யும் புறக்​கணித்​தது. ஒடி​சா​வின் பிர​தான எதிர்க்​கட்​சி​யான பிஜு ஜனதா தளம் இண்​டியாகூட்​ட​ணி​யில் இணை​யாமல் தனித்து செயல்​பட்டு வந்​தது. அந்த கட்​சி​யின் தலை​வர்​கள் டெல்லி பேரணி​யில் நேற்று பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT