பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பதவி காலம் கடந்த நவம்பர் 20-ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனால் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு சித்தராமையா மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘காங்கிரஸை பொறுத்தவரை கட்சிதான் முக்கியம். தனிநபர்கள் கட்சியைவிட பெரியவர்கள் கிடையாது. முதல்வர் பதவி விவகாரத்தில் கட்சி மேலிடம் உரிய நேரத்தில் முடிவெடுக்கும்” என பதிலளித்தார்.
அதற்கு முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. முதல்வர் பதவி யாருக்கு என்பதை ராகுல் காந்தி முடிவெடுப்பார். அவர் எடுக்கும் முடிவை நான் ஏற்றுகொள்வேன். இதுகுறித்து கட்சி மேலிடத் தலைவர்களிடம் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.