இந்தியா

‘மாணவர்களுக்கான குரல்’ பிரச்சார இயக்கத்துக்கு முழு ஆதரவு அளிக்க மாநில தலைவர்களுக்கு ராகுல் கோரிக்கை

மோகன் கணபதி

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து, அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆகியவை மேற்கொண்டு வரும் ‘மாணவர்களுக்கான குரல்’ பிரச்சார இயக்கத்துக்கு முழு ஆதரவை அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தொடர் மறு தேர்வுகள், பணியாளர் நியமனத்தில் தாமதம், காலியாக உள்ள அரசுப் பணிகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, அதிகரிக்கும் கல்விச் செலவு ஆகியவை நமது இந்திய இளைஞர்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா நகரில் நடைபெற்ற மாணவர்களின் குரல் பேரணியில் நமது கல்வி முறை குறித்த தொடர் விவாதங்களை நான் தொடங்கினேன். இன்றைய கல்வி முறை இளைஞர்கள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, குடும்பங்களை கடனிலும், தொடர் மன அழுத்தத்திலும், துன்பத்திலும் தள்ளுகின்றன. இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை, சுரண்டல் குறித்த உண்மையை வெளிப்படுத்தவும், இச்செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்லவும் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை.

மாணவர்களின் குழல் பிரச்சார இயக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த இந்திய இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஒடுக்குமுறை அமைப்பில் இருந்து நமது இளைஞர்களை விடுவிக்கவும், அவர்களுக்கு தகுதியான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்கும் ஒரு புதிய அமைப்புக்கான அடித்தளத்தை அமைக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT