புதுடெல்லி: கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
“பாஜக தூய்மையான அரசியலை நம்புவதாக கூறினாலும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அக்கட்சியின் தலைவராக உள்ளார்” என சாடினார்.
சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கின் அடிப்படையில் ராகுல் இதை கூறியிருந்தார். ஆனால் 2014-ம் ஆண்டிலேயே அவ்வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டிருந்ததால் ராகுலுக்கு எதிராக உ.பி. சுல்தான்பூர் நீதிமன்றத்தில் உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் ராகுல் 2024 பிப்ரவரியில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். 2024 ஜூலையில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவ்வழக்கில் புகார்தாரர் மற்றும் சாட்சிகளின் குறுக்கு விசாரணையை தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313-ன் கீழ் நேரில் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ராகுல் நேற்று சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதன்பின் நீதிமன்ற வளாகத்தை விட்டு ராகுல் வெளியேறினார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது.