கோப்புப் படம்

 
இந்தியா

ஐஐடி மும்பை மாணவர் தற்கொலை விவகாரம்: பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

மோகன் கணபதி

புதுடெல்லி: ஐஐடி மும்பை மாணவர் சாஹில் வகோடே தற்​கொலைக்கு நீதி கோரும் போராட்டத்தில் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக அவரது பெற்றோருக்கு ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

ஐஐடி மும்பை நிறு​வனத்​தில் இரண்​டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே (20), கடந்த வெள்​ளிக்​கிழமை (செப். 18) நடைபெற்ற இடைப்​பரு​வத் தேர்​வின்​போது கைப்​பேசி​யைப் பயன்​படுத்தி ஏஐ தளம் மூலம் விடை தேட முயன்​ற​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டார்.

தேர்​வறைக்​குப் பொறுப்​பாள​ராக இருந்த பேராசிரியரும் நிர்​வாக விவ​காரங்​களுக்​கான டீனு​மான சூர்​ய​நா​ராயண துல்லா அவரை கண்​டித்​த​தாகக் கூறப்​படு​கிறது. தேர்வு முடிந்த சில மணி நேரங்களி​லேயே வகோடே தனது விடுதி அறை​யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்​டார்.

தங்கள் மகனின் தற்​கொலைக்கு சாதி பாகு​பாடே காரணம் என்று மாணவரின் தந்தை ரவீந்திர வகோடே மற்றும் தாய் சோனாலி வகோடே ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேராசிரியர் சூரியநாராயண டூல்லா, ஐஐடி மும்பை இயக்குநர் ஷிரிஷ் கேடரே ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஐஐடி மும்பை நுழைவு வாயிலுக்கு வெளியே இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்காக அவர்கள், வாஷிம் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அவர்களிடம் வீடியோ கால் மூலமாக உரையாடியுள்ளார். அப்போது, மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் சிவராஜ் மோரே, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் ஆகியோரும் மாணவரின் பெற்றோருடன் இருந்துள்ளனர்.

சாஹில் வகோடேயின் மரணத்துக்கு நீதி கோரும் போராட்டத்தில் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக அவரது பெற்றோருக்கு ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஐஐடி மும்பை, சூர்​ய​ நாராயண துல்லாவை டீன் பதவியி​லிருந்து பணியிடை நீக்​கம் செய்​துள்ளது. மேலும், தற்போது அவர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

மாணவரின் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிர காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT