மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘ஜென்ஸீ’ இளைஞர்களின் பாணியில், கொரியன் ‘ஃபிங்கர் ஹார்ட்’ குறியீட்டைப் பயன்படுத்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி கூறியதாவது: கொரியன் ‘ஃபிங்கர் ஹார்ட்’ குறியீடு தென்கொரியாவில் தோன்றி, கே-பாப், கே-டிராமாக்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்தது என்பதைப் பற்றி அனைவரும் அறிவீர்கள்.
பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் குறுக்காக வைத்து அன்பு, நன்றியுணர்வு மற்றும் நட்பை வெளிப்படுத்த இக்குறியீடு பயன்படுகிறது. ஆனால், இதன் உண்மையான அர்த்தத்தை நான் சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். இன்றும் நான் ஒரு மாணவன், தினமும் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.
எனது இன்றைய பாடம்: இன்று நண்பர்கள் தினம், மேலும் இந்த குறியீடு ஒரு இதயத்தைக் குறிக்கிறது. அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். தேர்வுத் தாள் கசிவு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற தீவிரமான பிரச்சினைகளுக்கு எதிராக இளைஞர்களாகிய நீங்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்தல் விவகாரங்கள் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்த விழிப்புணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும்.
நீங்கள் தான் நம் அரசியலமைப்பைப் பாதுகாத்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த நண்பர்கள் தினத்தில், உங்களின் பாணியிலேயே (ஜென்ஸீ ) என் அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.