இந்தியா

பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மோகன் கணபதி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லம் முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் நேற்று பேரணி நடத்தினர். அப்போது, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீஸார், போராட்டக்காரர்களை கலைத்தனர்.

போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாகச் சென்றனர். இதில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்று கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை வந்தடைந்தது.

கல்யாண் மார்க்கில் பிரதமரின் இல்லம் முன்பாக அமர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் கோஷங்களை எழுப்பினர். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி இன்று நாங்கள் அவரது இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றோம். இந்த விவகாரத்தில் பொறுப்பேற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதிவி விலக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், போராட்டக் களத்துக்கு வந்து ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் சபாநாயகரிடம் கோரினோம். ஆனால், அவர் இது குறித்து விவாதம் நடக்க வேண்டுமானால், அதற்கான அனுமதியை நான் அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று கூறுகிறார். எங்களிடம் இதை வெளிப்படையாகவே அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற சம்பவத்துக்காக பிரதமர் மோடி இதுவரை மன்னிப்பு கூட கோரவில்லை. நமது நாட்டின் கல்வி முறையும் தேர்வு முறையும் சீர்குலைந்துவிட்டது. தேர்வு முறையை கரையான் அரித்துவிட்டது. இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. நாட்டில் இன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. ஒரு கதவைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு போட்டித் தேர்வுகள்தான். அதையும் சீர்குலைத்துவிட்டார்கள்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில், மாணவர்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் கல்வி முறையை மட்டும் குறைகூறவில்லை. தங்களுக்கான எதிர்காலம் குறித்த கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள். அம்பானி இல்ல திருணத்தைப் பார்க்கிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் அதற்கு செலவிடப்படுவதைப் பார்க்கிறார்கள். அதேநேரத்தில், தொழில் தொடங்க தங்களுக்கு பணம் இல்லாத நிலையையும் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதைத்தான் அவர்கள் தெரிவிக்கிறார்கள். தங்களுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். அதில் தவறு இல்லை. கல்வி முறையை மேம்படுத்த முனைவதற்குப் பதிலாக, தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பதற்குப் பதிலாக அரசு வேறு எதையோ செய்கிறது. முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அமித் ஷா ராஜினமா செய்ய வேண்டும், அவருக்கும் மேலே இருக்கும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT