புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் முறைகேடான முறையில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களை ஏற்காமல் செயல்பட்டதாக செய்தி வெளியாகியது. இதையும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி வலக வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று பேரணியில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி புறப்பட்ட இந்த பேரணி புறப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில், பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். இண்டியா கூட்டணியில் இடம்பெறாத இக்கட்சி, இன்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றது. நவீன் பட்நாயக்கின் அறிவுறுத்தலின்படி பேரணியில் பங்கேற்றதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் மனஸ் மங்கராஜ் தெரிவித்தார்.
இந்த பேரணியை முன்னிட்டு, தேர்தல் ஆணைய அலுவலகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டதோடு, ஏராளமான தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்றவர்கள் தடுக்கப்பட்டனர்.
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் தடுக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள், தடுப்புகள் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேரணியில் ஈடுபட்ட எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.