இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் அசுத்தமான குடிநீர் காரணமாக ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், அதனால் உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜன.17) சந்தித்தார்.
அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்பட்டு இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரை ராகுல் காந்தி இன்று சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசினார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் கட்சித் தலைவர் உமங் சிங்ஹார் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த மாதம் அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்பட்டு சுமார் 20 பேர் உயிரிழந்த பகீரத்புரா பகுதிக்கும் ராகுல் காந்தி இன்று சென்றார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு பகீரத்புராவில் காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன், பல இடங்களில் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.
பகீரத்புராவில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், மாநில அரசு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில், ஐந்து மாதக் குழந்தை உட்பட ஏழு பேர் மட்டுமே அப்பகுதியில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், அரசுக்குச் சொந்தமான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி அமைத்த ஒரு குழு தயாரித்த தணிக்கை அறிக்கை, பகீரத்புராவில் ஏற்பட்ட 15 பேரின் மரணங்கள் இந்த பாதிப்புடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பாதிப்பு தொடங்கிய பிறகு உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. சில மரணங்கள் மற்ற நோய்கள் மற்றும் காரணங்களால் ஏற்பட்டிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.