புதுடெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டங்களை நடத்தியதன் மூலம் இந்தியாவை உலக நாடுகளின் மத்தியில் ராகுல் காந்தி இழிவுபடுத்தி வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.
அசாம் மாநிலம் குவா ஹாட்டியில் ரூ.2,092 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்த அமித் ஷா பேசியதாவது: தலைநகர் டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டின் போது, இளைஞர் காங்கிரஸார் மேலாடையின்றி அரைநிரவாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது, கடும் கண்டனத்துக்கு உரியது.
பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ராகுல் காந்தி இந்தியாவையே இதுபோன்ற போராட்டங்களின் மூலம் எதிர்க்கத் தொடங்கியுள்ளார். சர்வதேச நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் ஆடையைக் களைந்து போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. நாங்களும் எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறோம்.
ஆனால் வரைமுறைகளை தாண்டியதில்லை. உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்க்கவும், முதலீடு செய்யவும் திரண்டிருந்த வேளையில், அந்தத் தளத்தை ராகுல் காந்தி தனது சொந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தச் செயலுக்கு அவர் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்க இதயம் கொண்டவர்கள் என்று பாராட்டி பேசியது அவரது பொறுப்பற்றத்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.
பாஜகவை எதிர்ப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு, ஆனால் உலக அரங்கில் இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்புகளை இது போன்ற போராட்டங்கள் முடக்கிப் போட்டுவிடும். உங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். சுகாதாரத் துறையில் சாதனை சுகாதாரத் துறையில் அசாம் தன்னிறைவு பெற்றுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை, மும்பை, கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற பல இடங்களுக்கு அலைந்த அசாம் மக்கள், இனி தங்கள் மாநிலத்திலேயே உயர் சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க ரஷ்யா, உக்ரைன் மற்றும் பல சிறிய நாடுகளுக்கு செல்கின்றனர். சில நேரங்களில் தங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, இந்திய மாணவர்கள் உள்நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு போதிய வசதிகளை செய்து கொடுப்பது முக்கியம். இங்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால், இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.