ராகுல் காந்தி
ஜபல்பூர்: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி சார்பில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் ஜகாபுவா பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பனாமா பேப்பர் ஊழல் குறித்து பேசினார். அப்போது இதில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங்கின் மகன் கார்த்திகேயா சிங்கிற்கும் தொடர்பு உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ராகுல் மீது, போபால் நீதிமன்றத்தில் கார்த்திகேயா சிங் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தனது வழக்கறிஞர் மூலம் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில் “தனது கருத்து கார்த்திகேயா சிங் தொடர்புடையது அல்ல. இருந்தாலும் தான் தெரிவித்த கருத்து அவரை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். எனக்கு அனுப்பப்பட்ட சம்மனையும், இந்த அவதூறு வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வேண்டுகோள் குறித்து நீதிபதி பிரமோத் குமார் அகர்வால் பரிசீலித்து வருகிறார்.