புதுடெல்லி: விடைத் தாள்கள் சரி பார்க்கப்படுவதற்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசையும் சிபிஎஸ்இ அமைப்பையும் ‘பிக்பாக்கெட் காரர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “பிக்பாக்கெட் காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இன்று அவர்கள் சிபிஎஸ்இ-க்குள்ளேயே அமர்ந்திருக்கிறார்கள். சிபிஎஸ்இ-யின் தவறால் மதிப்பெண்கள் தவறாக வந்தால், உங்களுக்கு என்ன கிடைக்கும் ? ஒரு கட்டண ரசீது கிடைக்கும். டிஜிட்டல் ஸ்கேன் நகல்: ஒரு பாடத்திற்கு ரூ.100, மறுகூட்டல்: ஒரு தாளுக்கு ரூ.100, மறுமதிப்பீடு: ஒரு கேள்விக்கு ரூ.25 என்று இருக்கும்.
ஒரு குழந்தை தனது சொந்த விடைத்தாளை சரிபார்ப்பதற்கு மட்டுமே ரூ.2,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும். யோசித்துப் பாருங்கள்: 4 லட்சம் குழந்தைகள் இதுபோன்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, சிபிஎஸ்இ எவ்வளவு பணத்தை சுருட்டுகிறது! மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்யும் போது, மதிப்பெண்களில் தவறுகள் நடப்பது உறுதி. அதை சரிசெய்வதற்கோ குழந்தை தன் பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. தவறு சிபிஎஸ்இ-யினுடையது; தண்டனை குழந்தைக்கு; வருமானம் அரசாங்கத்திற்கு” என்று அவர் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யும் முறை மற்றும் மாணவர்கள் எந்தெந்த நிலைகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை ராகுல் காந்தியுடன் வீடியோவில் பேசிய ஒரு மாணவர் விளக்கினார். இதையடுத்து இது தொடர்பாக சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். முன்னதாக 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு முறையை சீர்குலைத்ததாக சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு மீது ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார்.