புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம், பிரதமர் மோடி அடிபணிந்துவிட்டார்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘சார்.. உங்களை பார்க்கலாமா?’ என்று பிரதமர் மோடி என்னிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசினார். நானும் ‘யெஸ்’ என்றேன். அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விவகாரம் தொடர்பாக பேசினோம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்புறவு உள்ளது.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தேன். இதனால் பிரதமர் மோடிக்கு என் மீது மகிழ்ச்சி இல்லை. இப்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர்” என்றார்.
இதைச் சுட்டிக் காட்டியும் தான் பேசிய பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டும் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, ட்ரம்ப்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன், பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.
கடந்த 1971-ல் பாகிஸ்தானுடனான போரின் போது, தனது போர்க் கப்பலை அனுப்பி இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது. எனினும் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அடிபணியவில்லை. இதுதான் இந்திரா காந்திக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள வித்தியாசம் என தெரிவித்துள்ளார்.