புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் இடங்களைக் கைப்பற்றவும், சில நேரங்களில் ஒட்டுமொத்த அரசுகளையே கவிழ்க்கவும் வாக்குகள் திருடப்படுகின்றன.
மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி.க்களில், தோராயமாக ஒவ்வொரு 6-வது எம்.பி.யும் (6-ல் ஒருவர்) வாக்குத் திருட்டு மூலமே வெற்றி பெற்றுள்ளார். அவர்களைக் கண்டறிவது கடினமல்ல. பாஜக பாணியிலேயே அவர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அழைக்கலாமா ? ஹரியானாவைப் பொறுத்தவரை, அங்குள்ள ஒட்டுமொத்த அரசாங்கமே ஊடுருவல் காரர்கள்தான்.
அவர்கள் தங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கும் நிறுவனங்கள், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்பவை. அவையே ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கப்படுகின்றன. உண்மையைக் கண்டுதான் அவர்களுக்குப் பயம். ஏனெனில், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டால், அவர்களால் இன்று 140 இடங்களைக் கூட வெல்ல முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக 100-க்கும் மேற்பட்ட இடங்களை கொள்ளையடித்துவிட்டதாக மம்தா குற்றம்சாட்டி உள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தை பாஜகவின் ஆணையம் என்று விமர்சித்த அவர், இந்த வெற்றியை ஒழுக்கமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ புகார், மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியைக் கொண்டாடுவதைத் தவிர்க்குமாறு ராகுல் காந்தி தனது கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களை எச்சரித்த மறுநாளே இவ்வாறு தெரிவித்துள்ளார்.