இந்தியா

“நேர்மையற்ற, மிரட்டி பணம் பறிக்கும் முறையாக மாறிவிட்டது” - இந்திய கல்வி முறை குறித்து ராகுல் காட்டம்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியாவின் கல்வி முறை நேர்மையற்றதாகவும், மிரட்டி பணம் பறிக்கக்கூடியதாகவும் மாறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, தேர்வு முறையை மறு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், தேர்வு மற்றும் பணி நியமனங்களுக்கான கால அட்டவணையை முறைப்படுத்த வேண்டும் என மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 17-ம் தேதி ராஜஸ்தானின் கோட்டா நகரில் ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ராகுல் காந்தியின் முன்னெடுப்புக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக ஜூலை 17 அன்று உத்தராகண்டின் டேராடூனில் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஊழல், அநீதி, பாரபட்சம், நேர்மையின்மை ஆகிய இந்த நான்கு வார்த்தைகளும் என்னுடையவை அல்ல. நாட்டின் மாணவர்கள் இன்று இந்தியாவின் கல்வி முறையைக் குறிக்க இந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

உண்மை என்னவென்றால், இந்தியாவின் கல்வி முறை இப்போது ஒரு நேர்மையற்ற கொள்ளையடிக்கும் இயந்திரமாக மாறிவிட்டது. குழந்தைகளை அவர்களின் எதிர்காலத்துக்கு தயார்படுத்த வேண்டிய அந்த அமைப்பு இன்று அவர்களையும், அவர்களது குடும்பங்களையும் கடன், மன அழுத்தம், விரக்தி ஆகியவற்றில் தள்ளுகிறது.

இந்த ஊழல்தான் வினாத்தாள் கசிவு மாஃபியாவை உருவாக்குகிறது. இது தேர்வுக்கு தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் பல ஆண்டுகால கடின உழைப்பை ஒரே அடியில் பறித்துவிடுகிறது. இங்கே தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தங்களையும், அதிகாரிகள் பதவி உயர்வையும் பெறுகிறார்கள். ஆனால், யாருக்கு தண்டனை கிடைக்கிறது? சிதைந்துபோன கனவுகளுடன் தனியாக விடப்படும் மாணவர்களுக்குத்தான்.

மோடி அரசும் கல்வி அமைச்சரும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மவுனத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். பொறுப்பு கூறலில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஊடகங்களோ இது குறித்து பேசுவதே இல்லை.

என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. கல்வித்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. ஜூலை 17-ம் தேதி டேராடூனில் என்னுடன் இணையுங்கள். மாணவர்களின் குரலை இன்னும் வலுவாக ஒலிப்போம்.” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT