மும்பை: ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநில நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ராகுல் காந்தி 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு எதிராக மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் ராஜேஸ் குந்தே வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2016-ல் ஜாமீன் வழங்கியது. அப்போது ராகுல் காந்திக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உத்தரவாதம் அளித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதிபாட்டீல் காலமானார். இதனால் ராகுலின் ஜாமீனுக்கு வேறு ஒருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அவசியமானது.
இந்த சட்ட நடைமுறையை நிறைவேற்ற ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று ராகுல் நேற்று பிவாண்டி நீதிமன்றம் வந்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் மற்றும் தனது வழக்கறிஞர்களுடன் காலை 11 மணிக்கு நீதிபதி முன் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்காக சப்கல் உத்தரவாத பத்திரம் அளித்தார். இதையடுத்து ராகுல் காந்தி மீண்டும் ஜாமீன் பெற்று திரும்பிச் சென்றார்.