புதுடெல்லி: இண்டியா கூட்டணி தலைவர்கள் நேற்று காலை நாடாளுமன்றத்துக்கு வந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகக் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர்.
மாணவர்களின் குறைகளை கேட்காமல், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தும் மாணவர்களை மத்திய அரசு அடக்குவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர்.
அப்போது அகிலேஷ் யாதவ் கூறுகையில், “கருப்பு என்பது எதிர்ப்பின் நிறம்; அது துக்கத்தின் நிறம். அதனால் நாங்கள் கருப்பு ஆடை அணிந்து போராடுகிறோம்” என்றார்.
காங்கிரஸ் எம்பி பவன் கேரா பேசுகையில், “டெல்லியில் மாணவர்களுக்கு அரசு செய்த கொடுமைகளுக்கு எதிராகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரியும் நாங்கள் கருப்பு ஆடை அணிந்து போராடுகிறோம்” என்றார்.
மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “மத்திய அரசு சர்வாதிகாரத்தை பின்பற்றுகிறது. விதிகளின்படி போராட்டம் நடத்துபவர்களைக் கூட அவர்கள் துன்புறுத்துகிறார்கள். மாணவர்களையும் காங்கிரஸ் தலைவர்களையும் மறைமுகமாகப் பயமுறுத்துவதே அரசின் நோக்கம். எங்கள் மூத்த தலைவர்களை நசுக்க நினைத்தால், லட்சக்கணக்கான மக்கள்களத்தில் இறங்குவார்கள். அப்போது உங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.