காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
புதுடெல்லி: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஒரு தற்செயலான தவறு அல்ல, இது ஒரு திட்டமிடப்பட்ட சதி” என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோடி வசம் எப்போதும் போல பதில்களும் இல்லை, பொறுப்புணர்வும் இல்லை, வெட்கமும் இல்லை.
இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட கோயம்ப் நிறுவனம், ஏற்கெனவே 2019-ல் குளோபரினா என்ற பெயரில் தெலங்கானாவிலும் இதேபோன்ற ஒரு தில்லுமுல்லுவைச் செய்திருந்தது. பெயர் மாற்றப்பட்டது ஆனால் நோக்கம் அதேதான், குணமும் அதேதான். இதன் வரலாறு அனைவருக்கும் தெரிந்திருந்தும், இந்த ஒப்பந்தம் மீண்டும் அதே நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது.
1.85 மில்லியன் குழந்தைகளின் எதிர்காலம் இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது, இதைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, இது ஒரு திட்டமிடப்பட்ட சதி.
சிபிஎஸ்இ ஒப்பந்தம் ஏன் கோயம்ப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது, யாருடைய உத்தரவின் பேரில் இது நடந்தது? இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எந்தெந்த விதிகள் மற்றும் நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டன?
கோயம்ப் நிறுவனம் ஏற்கனவே குளோபரினா என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. இது சிபிஎஸ்இக்கு ஏன் தெரியாமல் போனது. ஏன் பின்னணிச் சோதனைகள் செய்யப்படவில்லை. கோயம்ப் நிர்வாகத்துக்கும் மோடி அரசுக்கும் இடையே உள்ள உண்மையான தொடர்பு என்ன?
இந்த முழு ஊழலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, உடனடியாக ஒரு சுதந்திரமான நீதித்துறை விசாரணையும், சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
சிபிஎஸ்இ-யின் இளம் தலைமுறை தோழர்களே, உங்கள் கடின உழைப்பையும், உங்கள் எதிர்காலத்தையும் யாராலும் திருட முடியாது. இந்த சதியின் வேர் வரை சென்று, இந்த ஊழலை நாங்கள் முழுமையாக வேரோடு பிடுங்கி எறிவோம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.