புதுடெல்லி: கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-ல் நீட் வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அமைச்சர் பதவி விலகவில்லை.
சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது 2026-ல் வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்போதும் அமைச்சர் பதவி விலகவில்லை. சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. மற்றொரு குழு அமைக்கப்பட உள்ளது.
பிரதமரே... தேசம் உங்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறது. அவற்றுக்குப் பதிலளியுங்கள். ஏன் வினாத்தாள் கசிவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன ? நீங்கள் ஏன் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறீர்கள் ? மீண்டும் மீண்டும் தோல்வியையே சந்திக்கும் கல்வி அமைச்சரை நீங்கள் ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை ? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை கடந்த 2019ம் ஆண்டு தேசிய தேர்வு முகமை ஏற்றதில் இருந்து, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.