ராகுல் காந்தி
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் வினாத்தாள் கசிவுகளின் மையமாக மாறிவிட்டதாகவும் இளைஞர்களின் எதிர்காலத்தை ஏலம் விட அனுமதிக்க மாட்டோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் இன்று நடைபெறவுள்ள மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்கு முன்னதாக, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தேவபூமியான உத்தராகண்ட் மாநிலம் தற்போது வினாத்தாள் கசிவுகளின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. இங்குள்ள துணைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தேர்வுகளில் ஒரு முறைகேடான ‘அமைப்பு' வேரூன்றியுள்ளது.
இதன் காரணமாக, பட்வாரி அல்லது லேக்பால் போன்ற அரசுப் பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படாமல், முறைகேட்டில் ஈடுபடுபவர்களால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்கப்படுகின்றன. முறைகேடுகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சட்டம் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. ஆனால் வினாத்தாள்கள் சந்தையில் தடையின்றி விற்கப்படுகின்றன.
ஆண்டுக் கணக்கில் படித்து, கட்டணம் செலுத்தி, தொலைதூரத் தேர்வு மையங்களுக்குச் சென்று ஒரு மாணவர் தேர்வு எழுதுகிறார். ஆனால், அவருக்கான அரசு வேலை வேறு ஒருவரால் விலைக்கு வாங்கப்படுகிறது. இது வெறும் வினாத்தாள் கசிவு அல்ல, அந்த இளைஞனின் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தைப் பறிக்கும் திருட்டு ஆகும்.
உத்தராகண்டின் ஒவ்வொரு மாணவருக்கும், இளைஞருக்கும் நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். இது உங்கள் போராட்டம், இதில் நான் உங்களுடன் நிற்கிறேன். டேராடூனில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று ‘மாணவர்களின் குரலை' ஒரு பேரொலியாக மாற்றுவோம். இளைஞர்களின் எதிர்காலத்தை ஏலம் விடவும், அவர்களின் கனவுகளைச் சிதைக்கவும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.