இந்தியா

அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி - ராகுல் காந்தியுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை, திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சந்தித்துப் பேசினார். டெல்லியில் ராகுல் காந்தியின் எண் 10, ஜன்பத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 8-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “பாஜகவை எதிர்கொள்வதில் கூட்டணிக் கட்சிகளிடையே கூடுதல் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் தேவை.

கூட்டணி கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, பொது நலன் சார்ந்த விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று (ஜூன் 9) அவரது இல்லத்துக்குச் சென்று மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போதும், கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இந்நிலையில், இன்று ராகுல் காந்தியை, அபிஷேக் பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து கட்சி பிளவுபட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 80 வேட்பாளர்கள் தேர்வான நிலையில், மம்தா பானர்ஜி சார்பில் நிறுத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் ஷோவந்தேப் சட்டோபாத்யாயவுக்கு எதிராக 58 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ரிதப்ரதா பானர்ஜி வெற்றி பெற்றார். இது மம்தா பானர்ஜிக்கு பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதோடு, மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்களில் சுமார் 20 பேர், பாஜக தலைமையிலான என்டிஏவில் இணைய விரும்புவதாகவும், மக்களவையில் தங்களை தணி அணியாக கருதுமாறும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால், மேற்கு வங்க சட்டப்பேரவையில் மட்டுமல்லாது, நாடாளுமன்றத்திலும் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ், பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர் நெருக்கடிகளை சந்தித்து வருவதோடு, அபிஷேக் பானர்ஜி மீதான பல்வேறு வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில், அபிஷேக் பானர்ஜி ராகுல் காந்தியை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT