சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவ் சத்தா

 
இந்தியா

பாஜகவில் இணைகிறார் ராகவ் சத்தா - மேலும் 6 எம்பிக்கள் இணைய உள்ளதாகவும் பேட்டி

மோகன் கணபதி

புதுடெல்லி: ஆம் ஆத்மியின் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து தானும் பாஜகவில் இணைய உள்ளதாக ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா, 2012-ல் அக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய இவர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீப காலமாக கேஜ்ரிவாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சத்தா, அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகவ் சத்தாவிடம் இருந்து கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர்களில் நானும் ஒருவன். எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சிக்காக நான் அர்ப்பணித்தேன். நாங்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுத்தோம். ஆனால், இப்போது கட்சி நேர்மையான அரசியலில் இருந்து விலகிவிட்டது. கட்சி தற்போது ஊழல் மலிந்ததாகவும் சமரசங்களுக்கு உட்பட்டதாகவும் மாறிவிட்டது.

தற்போது இருப்பது பழைய ஆம் ஆத்மி கட்சி அல்ல. ஆம் ஆத்மியின் தவறான நடவடிக்கைளில் நான் ஈடுபட விரும்பவில்லை. எனவே, கட்சியில் இருந்து விலகி மக்களுடன் நெருக்கமாகச் செல்ல இருக்கிறேன். ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரில் 7 பேர் பாஜகவில் இணைய இருக்கிறோம். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு நாங்கள் கடிதம் எழுதி அனுப்பிவிட்டோம்” என தெரிவித்தார்.

அந்த 7 பேர் யார் யார் என்ற கேள்விக்கு, “ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய ஆறு பேருடன் நானும் பாஜகவில் இணைய இருக்கிறேன்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT