புது டெல்லி: “வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. அது குறித்து ஆழமான விவாதம் தேவை” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜே.பி.நட்டா, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்புணர்வுடன் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தாண்டி, இது குறித்து விவாதிக்க வேண்டும். விவாதத்திற்கான சிறந்த தளம் நாடாளுமன்றமே; அந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வினாத்தாள் கசிவுக்கு வழிவகுத்த காரணிகள் என்ன?. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்?. மத்திய அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது என அலசி ஆராயும் வகையில் விரிவான விவாதம் நடைபெற வேண்டும்.
லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில், வினாத்தாள் கசிவு எங்கள் கவனத்திற்கு வந்தபோது நாங்கள் அதை எவ்வாறு கையாண்டோம் என்பதை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். பொறுப்புணர்வுள்ள அரசாக, இந்த விவகாரம் குறித்து அரசு நிச்சயமாக விசாரணை நடத்தி, உண்மையை மக்களிடமும் தேசத்திடமும் சமர்ப்பிக்கும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது; இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது முறையல்ல.
ராகுல் காந்தியிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்; நீங்கள் ஏன் தகவல்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறீர்கள்?. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அரசுகளின் ஆட்சியில் நடந்த வினாத்தாள் கசிவு குறித்து ஏன் விவாதிக்கவில்லை. மாணவர்களின் நலனோ அல்லது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோ உங்கள் நோக்கம் அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் அரசியல் ஆதாயம் தேட மட்டுமே நீங்கள் விரும்புகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விரிவான விவாதத்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. குறுகிய கால விவாதமோ அல்லது நீண்ட கால விவாதமோ, அதற்கான வடிவத்தை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கலாம். அவர்களுக்கு 12 மணிநேர விவாதம் வேண்டுமென்றால் நாங்கள் தயார்; 18 மணிநேர விவாதம் வேண்டுமென்றாலும் நாங்கள் தயார்.
மாணவர்கள் நம் அனைவருக்கும் உரியவர்கள்; அவர்கள் நாட்டின் எதிர்காலம். எனவே, அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டு இதற்கான நிரந்தரத் தீர்வை காண்பது இரு தரப்பினரின் பொறுப்பாகும்.” எனத் தெரிவித்தார்.