புதுடெல்லி: சுத்திகரிப்பு என்பது தீண்டாமையின் மற்றொரு பெயர். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இதை வெளிப்படையாகவே செய்கின்றன என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித் மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் கூட, இன்றும் அவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் தலித் குழந்தைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்யவும், தரையைக் கூட்டவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தேநீர் கடைகளில் கூட தலித் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. திருமண ஊர்வலங்களில் குதிரை சவாரி செய்ததற்காக அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
ஒரு தலித் நபர் எவ்வளவு அதிகமாக வெற்றி பெறுகிறாரோ, அவ்வளவு தீவிரமாக அவர் தாக்கப்படுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்கு இது தினமும் நிகழ்கிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி ஒரு கோயிலுக்குச் சென்றபோது, பாஜக தலைவர்கள் அங்கு 'சுத்திகரிப்பு' சடங்குகளைச் செய்தார்கள்.
பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி ஒரு கோயிலுக்குச் சென்றபோது அங்கேயும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தராகண்ட்டின் ஹல்த்வானியின் உள்ள ராம் லீலா மைதானத்தில் உரையாற்றியதை அடுத்து, அங்கும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
இவை பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் செய்யப்படுகின்றன; இந்திய அரசியலமைப்பின்படி இது ஒரு குற்றமாகும்.
ஆகஸ்ட் 13 அன்று, இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, அந்தச் சுத்திகரிப்பு நிகழ்வு ஒரு குற்றம் என்றும், அது தனக்கும் நாட்டின் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்றும் கூறினார்.
ஆனால், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர், சுத்திகரிப்பு செய்யப்பட்டது உண்மைதான் என்றும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறுகிறார்.
எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் 'சுத்திகரிப்பு' செய்வது ஒரு குற்றம். ஆனால் ராம் லீலா மைதான சுத்திகரிப்பு விவகாரத்தில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உத்தராகண்டில் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.
இது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; மாறாக, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தலித் மனிதருக்கும் தொடர்புடைய ஒரு பிரச்சினை.
எங்கள் தேசியத் தலைவருக்கே இத்தகைய நடத்தை வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் காட்ட முடியுமென்றால், பள்ளியில் ஒரு குழந்தைக்கு என்ன நிலைமை இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்?
இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பாகுபாட்டையும் சமத்துவமின்மையையும் ஊக்குவிக்கும் பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கு எதிராகவே எங்கள் போராட்டம் அமைந்துள்ளது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். பாஜக நடவடிக்கை எடுக்கத் தவறினாலும் கூட, அந்த நபர் தப்பிச் செல்ல காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.