புரி (ஒடிசா): ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களை (ரத்னா பண்டார்) கணக்கெடுக்கும் பணி 48 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கியது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் 3டி மேப்பிங் முறையில் கணக்கெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.
கடைசியாக, புரி ஜெகந்நாதர் கோயிலில் கடந்த ஜூலை 19-ம் தேதி ரத யாத்திரை நடைபெற்றது. அப்போது சகோதர தெய்வங்களான பாலபத்ரர், தேவி சுபத்ரா மற்றும் ஜெகந்நாதர் ஆகியோர் குண்டிச்சா கோயிலுக்கு ஆண்டுதோறும் செல்லும் ஆன்மிகப் பயணத்தில் இருந்தபோது பொக்கிஷ கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், அடுத்த கணக்கெடுப்பு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்தா பதி தெரிவித்துள்ளார்.