சண்டிகர்: பஞ்சாபில் 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
பின்னர் முதல்வர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பொதுமக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர்கள் வேட்பாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இந்தப் பட்டியலின்படி, முதல்வர் பகவந்த் மான், துரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், கோட்கபுரா தொகுதியில் போட்டியிட உள்ளார்.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். தற்போதைய பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 94 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.