பீமராவ் காம்ப்ளே
புனே: மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதியவருக்கு புனே சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குற்றம் நிகழ்ந்த 60 நாட்களுக்குள் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், நஸ்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமராவ் காம்ப்ளே (65). இவர் கடந்த மே 1ம் தேதி தாய் வழி உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு சிறுமியை குடும்பத்தினர் தேடிய போது அவரது உடல் மாட்டுத் தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நஸ்ராபூரில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். புனே மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரினர். இதற்கிடையில் சம்பவம் நடந்த அன்றே குற்றவாளி பீமராவ் காம்ப்ளேவை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் 16 நாட்களுக்குள் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிமன்றம் மே 28ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. ஜூன் 20ம் தேதி இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. ஜூன் 25ம் தேதி முதியவர் காம்ப்ளேவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் முதியவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
நீதிமன்றம் தனது உத்தரவில்,"கடைசியாக இருவரையும் ஒன்றாகப் பார்த்தது மற்றும் வலுவான சூழ்நிலை ஆதாரங்கள் மூலம் முதியவர் குற்றம் இழைத்ததை அரசுத் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. குற்றவாளியின் செயல் கொடூரமானது, மனிதாபிமானமற்றது, காட்டுமிராண்டித் தனமானது. இக்குற்றம் நீதிசார் மனசாட்சியை மட்டுமல்லாமல், பொது மக்களின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே வரவேற்றுள்ளார். "பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைத்துள்ளது. விசாரணையை புலனாய்வு அதிகாரிகள் மிகச் சிறப்பாக நடத்தி, ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி" என்று சுப்ரியா சுலே ‘எக்ஸ்' தளத்தில் கூறியுள்ளார்.