புதுடெல்லி: மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
இந்த சூழலில் மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்ற பேரணியின்போது போலீஸார் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் கூடியபோது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடும் அமளிக்கு நடுவே பொதுத் தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ தாக்கல் செய்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது கூச்சல், குழப்பம் நீடித்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறும்போது, ‘‘மாலை 5 மணி வரை அவையை ஒத்திவைக்கிறேன். அவை கூடும்
போது மசோதா மீதான விவாதம் தொடங்கப்படும். 6 மணி நேரம் விவாதம் நடைபெறும்’’ என்றார். மாலை 5 மணிக்கு அவை கூடியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் வழக்கம்போல அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மசோதா மீதான விவாதம் தடைபட்டது.
மாநிலங்களவையில் அமளி: மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மாணவர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது அதே பிரச்சினையை மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அவையில் விவாதம் நடத்துமாறு வலியுறுத்தினார். தொடர் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மசோதா மீது இன்று விவாதம்? - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் சமரசத்தால் ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதா நகல் அனைத்து எம்பிக்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. விவாதத்தின்போது எம்பிக்கள் அளிக்கும் பரிந்துரைகள் மசோதாவில் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.