புதுடெல்லி: மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் E20 பெட்ரோல் (20% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள்) கொள்கைக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை வாகன ஓட்டிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். “நமது வாகனம், நமது உரிமை” என்ற முழக்கத்துடன், தொழில்முனைவோரும் தொலைக்காட்சி பிரபலமுமான தெஹ்சீன் பூனாவாலா மற்றும் அவரது 'டீம் பாரத்' அமைப்பு இணைந்து இப்போராட்டத்தை நடத்தியது.
போராட்டத்தில் கலந்துகொண்ட வாகன ஓட்டிகள் E20 பெட்ரோலால் தங்களின் வாகனங்கள் சந்திக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டனர். மென்பொருள் பொறியாளர் சர்தக் என்பவர், தனது 2018-ஆம் ஆண்டு மாடல் காரில் கடந்த சில மாதங்களாக மைலேஜ் லிட்டருக்கு 18 கி.மீ-லிருந்து 14 கிமீ ஆக (22%) குறைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
டெல்லியைச் சேர்ந்த ராஜ் சிங் என்பவர், கடந்த 7 மாதங்களாக E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் காரின் எரிபொருள் அமைப்பில் கோளாறு ஏற்பட்டு, என்ஜின் வார்னிங் லைட் எரிந்ததாக கூறினார். முழு அமைப்பையும் சுத்தம் செய்து பாகங்களை மாற்ற அவருக்கு ரூ.35,000 செலவாகியுள்ளது.
முதித் அகர்வால் என்பவர் தனது கார் நடுவழியில் திடீரென நின்றதாகவும், சேவை மையத்தில் விசாரித்தபோது எத்தனால் கலப்பால் தினமும் 7 முதல் 8 கார்கள் இதே புகாருடன் வருவதாக ஊழியர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்.
டீம் பாரத் அமைப்பைச் சேர்ந்த கார் பந்தய வீரர் ரத்தன் தில்லான், எத்தனால் கலப்பால் காரின் எரிபொருள் ஃபில்டர் மற்றும் பைப்லைன்கள் அடைத்துக் கொள்வதாக கூறினார். நடுத்தர கார்களின் ஃபில்டரை மாற்றவே ரூ.25,000 முதல் ரூ.80,000 வரை செலவாவதாக குறிப்பிட்ட அவர், மலைப்பகுதிகளில் கடுமையான குளிரில் காரை ஸ்டார்ட் செய்வது பெரும் சவாலாக மாறியுள்ளது என்றார்.
மேலும், எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பதால், இந்திய பெட்ரோல் பங்குகளில் உள்ள தொட்டிகள் E20-ஐ சேமிக்கும் தரம் கொண்டவையாக இல்லை என்றும், இதனால் எரிபொருளில் தண்ணீர் கலந்து கார் என்ஜின்கள் ஸ்கிராப் நிலைக்கு தள்ளப்படுவதாகச் சிவ்பட் என்ற வாகன ஓட்டி சாடினார்.
மத்திய அரசின் கட்கரியின் இந்த எத்தனால் கொள்கை, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதாகக் கூறினாலும், இதன் பின்னணியில் உத்தரப் பிரதேசம் (155+ ஆலைகள்) மற்றும் மகாராஷ்டிராவின் (195+ ஆலைகள்) அரசியல் செல்வாக்குமிக்க சர்க்கரை ஆலை லாபி பெரும் லாபம் ஈட்டுவதாகவும், அதற்கு நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் பலியாக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
எனினும் எத்தனால் கலந்த எரிபொருளால் வாகனங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என வாகன உற்பத்தி மற்றும் எரிசக்தித் துறை நிபுணர்கள் குழு அண்மையில் மத்திய அரசின் முடிவை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.