புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையை திரட்டுவதற்கான அவகாசத்தை அமித் ஷாவுக்குக் கொடுக்கும் நோக்கிலேயே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு 88 நாட்கள் ஆகின்றன. இதற்கு முன் இத்தனை நாட்கள் தேதி குறிப்பிடாமல் இப்படி ஒத்திவைக்கப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டி, பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘2024-ல் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டியான கவுல் மற்றும் சக்தர் புத்தகத்தின் 8-வது பதிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியும் இடம்பெற்றுள்ளது.
அந்த புத்தகத்தின் 192-வது பக்கத்தில், மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கும், அது அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கும் இடைப்பட்டக் காலம் பொதுவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பக்கத்தில், இதுவரை அதிகபட்சமாக 28 நாட்கள் இடைவெளி இருந்ததாகவும், 2015 மழைக்காலக் கூட்டத்தொடரின்போது இது நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அக்.19, 2026 அன்று எழுதிய கடிதத்தில், 2008-ம் ஆண்டு நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சாதனை அளவாக 87 நாட்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கவுல் மற்றும் சக்தர் புத்தகத்தில் அது ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது புதிராக உள்ளது. மேலும், அக்காலத்தின் விசித்திரமான சூழல் காரணமாக அந்த 87 நாட்கள் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் பேரிலேயே நிர்ணயிக்கப்பட்டது.
அமைச்சரின் கருத்துப்படி பார்த்தால்கூட, இன்று ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு உட்பட கடந்த காலங்களில் நடந்ததைப் போல் அல்லாமல், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இன்றுடன் 88 நாட்கள் ஆகின்றன.
எப்படியாவது மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டு வந்து, அபாயகரமானதும், அழிவுகரமானதுமான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றிவிட, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கால அவகாசம் வழங்கவே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அவர் தனது புல்டோசர் தந்திரங்களை மீண்டும் கையாண்டால், ஏப்ரல் 17, 2026 அன்று எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு அந்த மசோதவை தோற்கடித்ததுபோல மீண்டும் தோற்கடிக்கும்.
தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வெளிப்படையாகவும் விரிவாகவும் விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆறு மாதங்களில் நான்கு முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு உடன்பட பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.