புதுடெல்லி: வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பியுமான பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தேர்வுத்தாள் கசிவு காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களுக்காக ராகுல் காந்தி தலைமையில் ராஜஸ்தானின் கோடா நகரில் நாளை நடைபெற உள்ள மாணவர் மாநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “பொதுமக்களின் நலனில் அக்கறையும் பொறுப்பும் உள்ள நாம் அனைவரும் மாணவர்களுடன் துணை நிற்க வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் துயரங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தேர்வுக்கு முன்பும் வினாத்தாள் கசியவிடப்படுகிறது. அதேவேளையில், தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் கடன் வாங்குகிறார்கள். கல்வியை தொடர்ந்து கற்க பெரும் நிதிச் சுமையை சுமக்கிறார்கள். ஆனாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லை. இது ஓர் ஆழமான கட்டமைப்புச் சார்ந்த பிரச்சினை.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வினாத்தாள் கசிவு என்பது ஏதோ ஒரு தேர்வில் மட்டும் நடப்பதல்ல. அது ஒவ்வொரு தேர்விலும் நடைபெறுகிறது. எனவே, நாம் அனைவரும் உண்மையாகவே மாணவர்களுக்கு துணை நின்று, ஆதரவளித்து, மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு தொடர் மாநாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த மாநாடுகள் நடைபெற உள்ளன. நாளை (ஜூன் 17) ராஜஸ்தானின் கோடா நகரில் தொடங்கும் இந்த மாணவர்களுக்கான மாநாடு, தொடர்ந்து அலகாபாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 11), டெல்லி (ஜூலை 14) ஆகிய மாநகரங்களிலும் நடைபெற உள்ளது.
மாணவர்கள், இளைஞர்களுக்கான அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு மோசடியால் பாதிக்கப்படும் பலரும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.